கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக பொறுப்பேற்றது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். ஆனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் அதிமுக கொறடா ஆகிய பொறுப்புகளில் இதுவரை யாரும் நியமிக்கப்படாதது அதிமுகவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், வரும் 14ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா தேர்வு பற்றி ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் வரும் 14ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு கொடுத்திருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இந்த நிலை தொடரும். அதிமுக பொதுச்செயலாளரைப் புதிதாக தேர்வு செய்ய மாட்டோம். ஓபிஎஸ், இபிஎஸ்தான் கட்சியை வழிநடத்துவர்'' என தெரிவித்தார்.