எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் தரப்பினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினர்.
இந்நிலையில், இன்று நடந்து வரும் ஈபிஎஸ் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் முக்கியமாக, ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கியதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாகவும், அதைப் பல நிர்வாகிகள் வரவேற்றுப் பேசினர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பேசிய நத்தம் விஸ்வநாதன் பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் இருக்கும் போலி ஓபிஎஸ். சட்டமன்றத் தேர்தலைப் போலவே நாடாளுமன்றத் தேர்தலையும் பழனிசாமி தலைமையில் எதிர்கொள்ளத் தயார் என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகமான நிர்வாகிகள் ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சிக்குள் இணைக்கக்கூடாது என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.