எத்தனை செயற்குழு பொதுக்குழு கூட்டினாலும் அதிமுகவால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாது என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் தெரிவித்தார்.
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி நகரில் திமுக கூட்டணி கட்சி சார்பில் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஒரு செயலும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய தங்க. தமிழ்செல்வன், “எத்தனை செயற்குழு பொதுக்குழு கூட்டம் கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாது, அறிவிக்கும் துணிச்சல் அவர்களிடம் இல்லை. திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்று அனைவருக்கும் தெரியும்.
அவரை முன்னிலைப்படுத்தி தான் நாங்கள் பிரச்சாரம் செய்வோம். அவர்தான் அடுத்த முதல்வராக வருவார். இந்த துணிச்சல் ஊழல் ஆட்சி நடத்துகிற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை. அதிமுகவில் துணிச்சலான ஆளும் இல்லாததால் பொதுக்குழு கூடினாலும் செயற்குழு கூட்டினாலும் முதல்வர் வேட்பாளரை அவர்களால் அறிவிக்க முடியாது என்று கூறினார்.