திருச்சி மாவட்டம் கரோனா பாதிப்பில், சிவப்பு மண்டலத்தில் இருந்து, ஆரஞ்சு மண்டலமாக மாறி இருக்கிறது. இருப்பினும் ஊரடங்கு கெடுபிடிகள் தொடர்வதால், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள காவிரிக் கரையில் மறைந்தவர்களுக்கு திதி கொடுக்க வழக்கம்போல் கூடும் கூட்டத்தைப் போலீசார் விரட்டியடித்து வருகிறார்கள்.
இந்தச் சூழலில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சமீபத்தில் மறைந்த தனது மனைவி கண்ணாத்தாளுக்கு திதி கொடுப்பதற்காக, திடீரென மே 03ஆம் தேதி காலை அம்மா மண்டபம் வந்திருந்தார். அவருடன் ஆறு கார்களில் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களும் அதிரடியாக வந்திறங்கியதைப் பார்த்து, அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தார்கள்.
நேராக, அம்மா மண்டபம் படித்துறை நோக்கி படையெடுத்த அமைச்சர் வகையறாக்கள், சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அஸ்தி கரைப்பு, காரியம் போன்ற சம்பிரதாயத்தில் ஈடுபட்டனர். இத்தனை நாட்களாக அந்தப் பகுதியில் திதி கொடுக்க வந்தவர்களை விரட்டியடித்து வந்த காவல்துறையினர், அமைச்சருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் மும்முரமாக இருந்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள், அமைச்சருக்கு மட்டும் கரோனா பரவாதா? என்று தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டார்கள். தனித்திருப்போம் என்கிறார் முதல்வர். அதை அமைச்சரே மீறலாமா எனக் கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.