அதிமுக வேட்பாளர் தென்னரசு குறித்து புகார் சொல்லிய பெண்ணை ஒருமையில் பேசிய அதிமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இடைத்தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று காலை கருங்கல்பாளையத்தில் வீதி வீதியாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தென்னரசு எம்.எல்.ஏவாக இருந்தபோது, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனப் பெண்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து வேட்பாளர் தென்னரசு வாக்காளர்களின் குறைகளைக் கேட்காமல் புறப்பட்டுச் சென்றதால் பரபரப்பு உண்டானது.
மேலும் வேட்பாளருடன் வாகனத்தில் ஒலி வாங்கியில் பேசிக்கொண்டு இருந்தவர் பெண்ணின் குற்றச்சாட்டை மதிக்காமல், “அவங்க சொல்லிட்டு இருக்காங்க... தெருவுக்கு ஒன்ணு இருக்கும்... (ஒருமையில் பேசினார் நாகரீகம் கருதி மாற்றப்பட்டுள்ளது) நாம போய்ட்டே இருப்போம்” எனக் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அந்த பெண் பேசும்போது, “கொரோனா காலத்துல அவங்க கிட்ட போய் கையேந்துனோம். ஆனா அவங்க கருணை காட்டல” என்றார்.