தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பாஜக, பாமக, தேமுதிக கட்சியினர் மேயர் பதவி வேண்டும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது நேற்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் களப்பணிப் பற்றி ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளான பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து இருந்தனர். குறிப்பாக, பாமக கட்சி சார்பாக ஜிகே மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏகே மூர்த்தி, அரங்க வேலு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோரும், தேமுதிக சார்பாக அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி ஆகியோரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுகின்றனர். உள்ளாட்சி தேர்தல் தேதியை தமிழகம் முழுவதும் நடத்த தேதி அறிவிக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சியான திமுக அதிமுகவின் உள்ளாட்சி தேர்தல் வியூகத்தை உற்று கவனித்து வருவதாகவும் கூறுகின்றனர்.