"கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும், அதோடு எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை" என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
நாகை மாவட்டம், திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நேற்று (26.05.2021) ஆய்வு செய்தார், அதனைத்தொடர்ந்து திட்டச்சேரி பேரூராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியைப் பார்வையிட்டார். அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் இருக்கை, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "நாகை மாவட்டத்தில் தேவையான தடுப்பூசி கையிருப்பு உள்ளது. பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தேவைக்கு ஏற்ப கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். மாவட்டத்தில் வாய்ப்பு உள்ள இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்" என்றார்.
மேலும் அவரிடம், கரோனா தடுப்பு பணியில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்தவர், "கடந்த ஆட்சியில் உள்ள நடைமுறைகள் மாற்றப்பட்டு எதிர்க்கட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. பேரிடர் காலத்தில் அரசுடன் சேர்ந்து பயணிப்பது அவர்களின் கடமை. எங்களுடன் சேர்ந்து வந்தால் பயணிக்க நாங்கள் தயார். எதிர்க்கட்சிகள் பேரிடர் காலத்தில் மக்களுக்கு செய்யும் பணிகளை ஆளுங்கட்சி தடுக்கவில்லை" என்றார்.