முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 30 ஆண்டுகளாக சிறை கொட்டடியில் இருக்கிறார்கள். தண்டனை காலம் முடிந்தும் இவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நீண்ட வருடங்களாக குரல் கொடுத்துவருகின்றனர்.
முந்தைய அதிமுக அரசு, இவர்களை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைத்தது. கவர்னர் அது குறித்து முடிவையும் தெரிவிக்காமல் நீண்ட வருடங்களாக மௌனம் காத்துவருகிறார்.
அதேசமயம், சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்றிருப்பதால் மத்திய அரசு இவர்களின் விடுதலைக்கு எதிராகவே இருக்கிறது. இந்த நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக தமிழக அரசின் பரிந்துரையை அனுப்பிவைத்துவிட்டு அமைதியாக இருக்கிறார் கவர்னர்.
இந்தச் சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினிடம், 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதனையடுத்து, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது கவனம் செலுத்தி, 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். அந்தக் கடிதம் டி.ஆர்.பாலு மூலமாக ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
திமுகவின் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கிறது தமிழக காங்கிரஸ். இதுகுறித்து இன்று (21.05.2021) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தைக் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. தமிழர்கள் என்ற முறையில் விடுதலை செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.