ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பை எட்டியுள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்து பிரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 121 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த வேட்புமனு பரிசீலனையில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் 50 பேர் இந்த பட்டியலில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் மகன் கலையரசன் உட்பட இரண்டு பேர் நேற்று தங்களது மனுக்களை திரும்பப் பெற்றனர். அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் இன்று தனது வேட்பு மனுவை திரும்பப் பெற உள்ளார். மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட உள்ளது. சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்க 191 சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.