
திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் திமுக இளைஞரணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்தும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் உள்ள பணிகளைத் தமிழர்களுக்கே வழங்க வேண்டும், சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மீது ஏவும் மத்திய பாஜக அரசின் போக்கிற்கு வன்மையான கண்டனம், சமூக நீதிக்கு எதிராகவும், தமிழ்நாட்டிற்கு எதிராகவும் பொதுவெளியில் செயல்படும் ஆளுநருக்குக் கண்டனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக இளைஞரணிக் கூட்டத்தில் இயற்றப்பட்டன.
இதில் அமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “திமுக இளைஞரணி இன்று ஆதிக்கவாதிகளை விரட்டியடிக்கும் கொள்கை பாசறையாகவும், தமிழர்களின் உரிமை காக்கும் போராட்டத்தில் களமாடும் போர்ப்படையாகவும் உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற இளைஞர் அணியின் முதல் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புற நடத்தினார். அதே போன்று விரைவில் நடைபெற உள்ள இரண்டாவது மாநில மாநாட்டில் 10 லட்சம் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்ய உறுதியேற்றுக்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.