
பாஜக அதிமுக கூட்டணி முறியுமா தொடருமா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
இன்று அதிமுக இபிஎஸ் அணி சார்பில் அதிமுக தேர்தல் பணிமனை துவங்கப்பட்டு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என அதிமுக இபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தேர்தல் பணிமனையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பதாகைகளில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று இடம்பெற்று இருந்தது. மேலும் பாஜக தலைவர்களின் படங்கள் எதுவும் பதாகைகளில் இடம் பெறாமல் இருந்தது அரசியல் களத்தை பரபரப்பாக்கியது. ஏனெனில் அதிமுக முன்னதாக பாஜக உடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளிக்காமல் சென்றார். மேலும் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட இந்த பதாகைகள் காரணமாக பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டதோ என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் மாலையில் கூட்டணி பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றே பதாகைகள் வைக்கப்பட்டன.
எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைகள் அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.