புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் டெல்லியில் நேற்று (01.07.2021) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களிடம் புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து மோடி கேட்டறிந்துள்ளார்.
மோடியிடம், புதுச்சேரியின் கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டதுடன், புதுச்சேரிக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விரைவாக கொடுக்குமாறும், கரோனா நிதி ரூ. 500 கோடி உடனடியாக வழங்கவும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்தச் சந்திப்பின்போது புதுச்சேரியில் புதிய சட்டமன்றக் கட்டடம் அமைக்க மோடி ஒப்புதல் அளித்ததாகவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன், புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணகுமார் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.