ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு அணி வேட்பாளர் தேர்வும் சின்னம் கிடைப்பதிலும் குழப்பம் நீடித்து வரும் நிலையில் தேர்தல் பணியை சென்ற இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது எடப்பாடி தரப்பு. கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு நாளும் ஈரோட்டுக்கு வந்து நிர்வாகிகளை சந்திப்பதும், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி 28 ஆம் தேதி(இன்று) ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்துள்ளனர். அப்போது திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் எம்ஜிஆருக்கு திருப்புமுனையை உருவாக்கியதுபோல், இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் திருப்பத்தை கொடுக்கும். அதிமுக மகத்தான வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்த தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும். அதிமுக இந்த இடைத்தேர்தலில் தனித்து களம் காண்கிறது. எங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.
அதிமுகவில் 98.5 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டு கட்சிப் பணியாற்றி வருகின்றனர். வாக்கு சேகரிக்கும் பணியை வெள்ளிக்கிழமை இரவே தொடங்கிவிட்டோம். பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ள கட்சி நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணியில் எங்கள் வேகம், விவேகம் ஓரிரு நாள்களில் அனைவருக்கும் தெரியும். எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்" என்றார்.