இந்திய அளவில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும், தமிழக அளவில் அந்த கூட்டணி உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவையும், அதன் தலைவர்களையும் விமர்சித்து வருவதும், அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை விமர்சித்து வருவதும் தொடர்ந்து கொண்டே வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவர். ஜஸ்ட் லைக் அவ்வளவுதான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணிக் கட்சியினர் கூட்டத்தில் மோடி, எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார். அவருக்குத் தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்குத் தெரியவில்லை” எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய அண்ணாமலை, “சிலர் தன்னை அரசியல் விஞ்ஞானிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்திற்கு எல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. எங்களுக்கு மக்கள்தான் எஜமானர்கள்; வேறு எந்த தலைவர்களின் அனுமதியும் எங்களுக்குத் தேவையில்லை” என்று பேசியிருந்தார். இதற்கு அதிமுகவில் யாரை விமர்சித்தாலும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ள செல்லூர் ராஜூ, “நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை விமர்சிக்கிறார்; அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லாருக்கும் தெரியும். அதிமுகவை விமர்சிப்பவர்கள் தமிழ்நாடு அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.