
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் தினசரி 100க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், பயணிகள் மின்சார ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரக்கோணம் - சென்னை செண்ட்ரல் வழித்தடத்தில் அரக்கோணம் அருகே திருவாலங்காடு என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதற்கு அருகே ரயில் தண்டவாள இணைப்புகளில் உள்ள உள்ள போல்ட்டுகளை மர்ம நபர்கள் கழற்றிவிட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர் ஒருவர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அரக்கோணம் ரயில்வே போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு மோப்ப நாய்களையும் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக இயக்கப்படும் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க ரயில் ஓட்டுநர்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகளை கழற்றி ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாள இணைப்புகளில் இருந்த போல்ட்டுகள் கழற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அருகே உள்ள கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகள் கழற்றப்பட்டதால் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.