
அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்புகளையும், முடிவுகளையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்குப் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2ஆம் தேதி அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் உலக நாடுகள் அதிர்ந்து போயின. பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. அதே சமயம் வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 46 சதவீதம் வரி விதித்தது. மற்றொரு புறம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில் செல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் செல்போன்களையும், தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் தொழிற்சாலை வியட்நாமில் மிகப்பெரிய செல்போன் உற்பத்தி மையமாகத் திகழ்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் ரூ. 4.42 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன் கள் மற்றும் உதிரி பாகங்களை சாம்சங் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.