சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு எனப் பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் டிச. 13 ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால், கடந்த வாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக சில மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடியாமல் அது தள்ளிவைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டங்கள் தள்ளிவைக்கப்பட்ட மாவட்டங்களில் நேற்று அதிமுக ஈபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சென்னையில் மட்டும் 30 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
திருவள்ளூர் மாவட்ட திருத்தணி அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் திருத்தணி ஹரி கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “எந்தக் காலத்தாலும் பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. எடப்பாடி பழனிசாமியால் தான் பாஜக நான்கு எம்.எல்.ஏக்களை வாங்கியது. நாங்கள் 66 எம்.எல்.ஏக்களை வைத்துள்ளோம். எங்களை எதிர்க்கட்சி இல்லை எனச் சொல்கிறார்கள்” எனக் கூறினார்.