1986-ல் ஆரணி நகராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த செல்வராஜ் இருந்தபோது உருவாக்கப்பட்டது காந்தி காய்கறி மார்க்கெட். நகராட்சிக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்து வந்த இந்த மார்க்கெட், பல ஆண்டுகளாகி விட்டதால், பாழடைந்து மழைக்காலங்களில் வியாபாரிகளுக்கு பெரிய சிரமத்தைக் கொடுத்தது. இதனால் மார்க்கெட்டை முற்றிலுமாக இடித்து விட்டு, புதிதாகக் கட்ட வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
நகராட்சியில் நிதி இல்லாததால் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கடைகள் கட்டுவது எனத் தீர்மானிக்கப்பட்டு, மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத்தின் துணைத் தலைவராக இருந்தவர், இப்போது ஆரணி நகர ஜெ. பேரவைச் செயலாளராக இருப்பவர், அமைச்சர் சேவூர் இராமச்சந்திரனின் இடதுகரமாக இருப்பவர், இப்படிச் சகல செல்வாக்கோடும் இருக்கும் பாரி பாபுவிடம் கடைகள் கட்டும் பணி ஒதுக்கப்பட்டது. 2018-ல் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்க பூமி பூஜை போட்டதுமே ஏற்கனவே அந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த 96 வியாபாரிகளையும் அழைத்தார் வியாபாரிகள் சங்கத் தலைவர் சாதிக் பாட்சா. "ஒரு கடைக்கு 2.10 லட்சம் கொடுத்துருங்க, 15 வருஷத்துக்கு வாடகை தரவேண்டாம்' எனக் கூலாகச் சொல்லி கலெக்ஷன்பண்ணி பாரி பாபுவிடம் கொடுத்துவிட்டார். 96 கடைகளுடன் மேலும் 48 கடைகள் கட்டி முடித்தார் பாரிபாபு. அதன் பின்தான் பிரச்சினை ஆரம்பமானது.
அது குறித்து நம்மிடம் பேசினார் வியாபாரி சுமன், இந்த மார்க்கெட்ல எங்க குடும்பத்துக்கு நாலு கடைகள் இருந்துச்சு. இப்ப கடை ஒதுக்கும் போது ஒரு கடைதான்னு சொன்னாங்க. நகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் நான் முறையிட்டபோது, பாரி பாபுவைப் பாருன்னு சொன்னாரு. அவரிடம் போனால், ஒரு கடைதான், அதுக்கு தினசரி வாடகை 200 ரூபாய்ன்னு குண்டைத் தூக்கிப் போட்டார். கூடுதலாக கட்டிய 48 கடைகளை மார்வாடிகளுக்கு கொடுத்துட்டார். ஆனால் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரனோ, இந்த மார்க்கெட் கட்டம் கட்ட முதல்வரிடம் பேசி 2.5 கோடி ரூபாய் வாங்கி வந்தேன்னு தனது ஃபேஸ்புக்ல போட்ருக்கார். அப்படின்னா எங்களிடம் வசூலித்த பணம் எங்கே போனது'' என கொந்தளித்தார்.
நாம் பாரிபாபுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "வியாபாரிகளிடம் பணம் வாங்கியது உண்மைதான். கடையைக் காலி செய்யும்போது திருப்பித் தந்துவிடுவேன். வாங்கிய பணத்துக்கு அக்ரிமெண்ட்டும் போட்டுக் கொடுத்துருவேன்'' என்றார்.
நகர இளைஞர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலரோ, "தரை வாடகை அடிப்படையில் பாரிபாபுவிடம் காண்ட்ராக்ட் விட்டுள்ளது நகராட்சி. மாதத்திற்கு 8.64 லட்சம், வருடத்திற்கு 1 கோடி வருமானம். எல்லா செலவுகளும் போக பாரிபாபுவிற்கு 70 லட்ச ரூபாய் லாபம்'' என்கிறார்கள்.