சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த பார்வதி மணி இருந்து வருகிறார். இவர் மீது 15 உறுப்பினர்கள் திடீரென்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
இந்த ஒன்றியத்தில் மொத்தம் 19 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அதிமுகவைச் சேர்ந்த 3 பேர் உள்பட 15 உறுப்பினர்கள், தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இத்தீர்மான கடிதத்துடன் கூடிய மனுவை, அவர்கள் சேலம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புதன்கிழமை (ஜன. 12) நேரில் வழங்கினர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது; ‘அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர் பார்வதி மணி, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், ஒருதலைப்பட்சமாகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை, செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடந்த ஒன்றியக்குழு கூட்டங்களில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.
தமிழக அரசின் நலத்திட்டங்களை அனைத்து வார்டுகளுக்கும் செயல்படுத்தாமல், ஆதாய நோக்கில் அரசியல் உணர்வோடு செயல்படுகிறார். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகளுக்கு முரணாக செயல்படுவதோடு, மக்கள் மத்தியில் அரசுக்கு கெட்டப்பெயர் உருவாக்கும் வகையிலும் செயல்படுகிறார். ஒன்றிய அலுவலகத்தில் தேவையற்ற வழிகளில் தலையீடு செய்து நிர்வாகத்தில் குழப்பத்தையும், ஊழியர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத் தலைமை அலுவலகத்திலேயே தான் சார்ந்து இருக்கும் கட்சியின் அரசியல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார்.
மேலும், ஒன்றியக்குழுவிற்கு தொடர்பே இல்லாத இளங்கோவன் என்பவர் பெயரை கல்வெட்டில் பொறிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பெண் தலைவரான இவர் நிர்வாகம் செய்யாமல், அவருடைய கணவர் மணியை ஒன்றிய நிர்வாகப்பணிகளைச் செய்ய அனுமதிக்கிறார். இவை ஊராட்சிகள் சட்ட விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. அவர் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். அதனால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.’ இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
தீர்மான கடிதத்தில் அதிமுகவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளதால் அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.