Published on 15/10/2019 | Edited on 15/10/2019
கடந்த (13.10.2019) அன்று விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விக்கிரவாண்டிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து விரிவான அறிக்கையை தமிழக தலைமை அதிகாரி சத்யா பிரதா சாஹு கேட்டிருக்கிறார். சீமான் என்ன பேசினார், எங்கு பேசினார், வீடியோ ஆதாரம் போன்றவை தொடர்பான விரிவான அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீமான் கூறிய கருத்துக்கு அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் சீமான் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் அதிமுகவை குறை கூற சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது. நாம் தமிழர் என கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டால் சீமான் என்ன தமிழரா?” என்று கேட்டுள்ளார். மேலும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று நினைப்பவர் சசிகலா. அதே போல் சசிகலா விரைவில் விடுதலை ஆக வேண்டும் என்பது எனது மனசாட்சியின் கருத்து என்றும் கூறியுள்ளார்.