சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
இதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமாக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது பொதுக்குழு. கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நீங்கள் விரும்பிய தீர்மானம் பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு. இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான். ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி; தி.மு.க.வின் கைக்கூலி. ஓ.பி.எஸ். விட்டுக்கொடுத்ததாகக் கூறுகிறார்; நாங்கள் தான் விட்டுக்கொடுத்தோம்.
தனக்கு நன்மை எனில் சரி என்பார்; நன்மை இல்லை எனில் தவறு என்பார். தொண்டர்களின் விருப்பமான ஒற்றைத் தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தரவில்லை. கட்சியில் இருந்து கொண்டே பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஒரே நபர் அண்ணன் ஓ.பி.எஸ்.தான். மு.க.ஸ்டாலினின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கட்சியில் இருந்தபோதே ஓ.பி.எஸ். மகன் பேசினார். ரவுடிகளுடன் நுழைந்து கட்சி அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை தூக்கிச் சென்றுள்ளனர். கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு தேவை என முன்பே காவல்துறையிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை" என்று குற்றம்சாட்டினார்.