தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் தங்கமணியை ஆதரித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சியைக் கலைக்க நினைத்த ஸ்டாலினின் எண்ணம் தவிடுபொடியாக்கப்பட்டது. விவசாயிகளின் ரூபாய் 12,110 பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. வீடில்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். திமுக என்பது ஒரு கட்சியல்ல, அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். திமுகவில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. முந்தைய திமுக ஆட்சி இருண்ட ஆட்சி; கடும் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த ஒரே கட்சி திமுக. அவர்கள் ஆட்சியில் செய்த தவறுகள் பற்றிக் கேட்டால் பதில் தர மறுக்கின்றனர்.
மக்கள் ஸ்டாலின் வீட்டு வாயிலுக்குக் கூட செல்ல முடியாது; ஆனால் மக்கள் எந்த நேரத்திலும் என்னை வந்து சந்திக்கலாம். ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. நெசவாளர்களுக்கு ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களின் சோதனையான காலகட்டத்தில் உதவி செய்யும் ஒரே அரசு அதிமுக அரசு. எங்கள் ஆட்சியில் சாதிச் சண்டை, மதச் சண்டை கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது" என்றார்.