தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதற்கடுத்த நாளே வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.
நேற்று (19.08.2021) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருப்பதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியுள்ளதாவது, ''பல விஷயங்களில் முடிவெடுக்க முடியவில்லை. தமிழகத்தின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற முடியாததற்கு நிதிச் சூழல்தான் காரணம். அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். ஆனால் நிதிச் சூழல் மந்த நிலையில் உள்ளது'' எனத் தெரிவித்திருந்தார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பே தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை, ''வருவாயைப் பெருக்குவதைவிட செலவினங்களைச் சுருக்குவது நல்லது. 100 நாள் என்பது நாட்களின் குறியீடே தவிர, அதில் என்ன சிறப்பு இருக்கிறது. மக்கள் திட்டங்களுக்கு நிதியில்லை, ஆனால் பக்கம்பக்கமாக விளம்பரங்கள் வெளியிடுவதா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.