Skip to main content

இது கூட்டணி தர்மமா? அழகிரிக்கு ஈஸ்வரன் கேள்வி...

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

 

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தனது கட்சியினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், 
 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வெற்றிப்பெற்றவர்களோடு நன்றி தெரிவித்திருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த அத்தனை பேருக்கும், ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றிய திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள அத்தனை தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

 

E.R.Eswaran


 

திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த உரசலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தல் என்று சொன்னால் ஆங்காங்கே சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். காங்கிரஸ் கட்சி இதனை பெரிதுப்படுத்திருக்கக்கூடிய அவசியம் இல்லை. கொங்கு மண்டலத்தில் எங்களுக்கே பல இடங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதையெல்லாம் நான் சொல்வதாக இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் நேரடியாக ஊடகத்திற்கு சொன்ன காரணத்தினால், பிரச்சனை எல்லோரிடத்திலும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்காக இதனை நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.


 

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், அவர்கள் கட்சியிலும் எல்லா பொறுப்பாளர்களையும் அழைத்து எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தீர்கள் என்று கேட்க வேண்டும். ஏன் இதனை நான் குறிப்பாக சொல்லுகிறேன் என்று சொன்னால், பல இடங்களில் பிரச்சனை இருந்தாலும் இதற்காக ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்கிறேன். 


 

நாமக்கல் மாவட்டத்தில், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. திமுகவின் சார்பில் உதயசூரியன் சின்னமும் கொடுத்து நாங்கள் அதில் போட்டியிடுகிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு பிரச்சனை என்றால் அவர்கள் சுயேட்சையாக நின்றிருக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையே கை சின்னத்தை கொடுத்து கூட்டணிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். இது கூட்டணி தர்மமா? காங்கிரஸ் தலைவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். ஆனால் அவர் திரும்ப அழைக்கவில்லை. அங்கு எங்கள் வேட்பாளர் தோல்வியடைந்தார். காரணம் காங்கிரஸ் அல்ல, கூட்டணிக்குள் குழப்பம் உள்ளது என்று வாக்களிக்கும் பொதுவானர்கள் வாக்களிக்காமல் விட்ட காரணத்தினால் அந்த இடத்தில் நாங்கள் தோற்றுப்போனோம்.
 

உள்ளாட்சித் தேர்தலில் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். ஆகையால்தான் இதனை பெருதிப்படுத்தி பேசுவதால் எந்த பயனும் இல்லை. இதையெல்லாம் தாண்டித்தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றார்.

சார்ந்த செய்திகள்