கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவானது மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம். கூட்டணி தர்மம் என்ற வகையில் பாஜகவை நாங்கள் விமர்சிக்கவில்லை. அனைவரும் ஒன்று சேர்ந்து இணக்கமாகச் செயல்பட்டு ஒரே குறிக்கோளுடன் இந்தியாவை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதமராக மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என்று பேசி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும்போது, "தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என விரும்புவது தவறு இல்லை. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை எனக் குற்றம் சாட்டுவது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த மாநில விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. இந்திய நாட்டில் வளர்ச்சி பாதையில் தமிழகத்திற்கு இணையாக வேறு எந்த மாநிலமும் இல்லை" எனப் பேசினார்.