ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பை எட்டியுள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று அதிமுக கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு யாரும் போகக் கூடாது என ஆங்காங்கு ஷாமியானா போட்டு கூட்டத்திற்கு யாரும் போகாதீர்கள் இங்கேயே இருங்கள் என மக்களை இருக்க வைத்துள்ளனர். 1000 ரூபாய் கொடுத்து பிரியாணி கொடுத்து மக்களை அங்கேயே இருக்க வைத்துள்ளனர். இம்மாதிரியான தேர்தல் எங்காவது நடந்தது உண்டா. கூட்டத்தை போட்டோம். மிக எழுச்சியாக இருந்தது. இப்படி சட்ட விரோதமாக ஷாமியானா போட்டுள்ளார்கள். இதை வாட்ஸாப்ல உங்களுக்கு அனுப்புறேன். ஜனநாயகத்தை மதிக்காமல் எந்த கட்சியும் இதை மாதிரி செய்தது இல்லை.
சென்னையில் திமுக அமைச்சர்கள் இருவரைத் தவிர இங்கு யாரும் இல்லை. சென்னையில் முதல்வரும் உதயநிதியும் மட்டுமே உள்ளனர். 30 அமைச்சர்கள் பிற திமுக நிர்வாகிகள் அனைவரும் ஈரோட்டில் தான் இருக்கின்றார்கள். தமிழ் மாநில காங்கிரசிடம் நாங்கள் நிற்கப் போகிறோம் என கேட்டோம். அந்த தில் எங்களுக்கு இருந்ததே. அப்போ தோற்றுவிடுவோம் என தெரிந்து தான் காங்கிரஸை நிற்க வைத்தீர்கள். பழியை அவர்கள் மேல் போட்டுவிடலாம். இவர்கள் எத்தகைய அராஜக செயல்கள் ஜனநாயக விரோத செயல்களை செய்தாலும் அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார்” என்றார்.