அதிமுகவில் நிலவி வந்த இரட்டை தலைமை விவகாரத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மேலும், மூன்று மாதங்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியது.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை, கடை நடத்துகிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் நாகரீகம் இல்லாமல் கட்சியின் லெட்டர்பேடை பயன்படுத்தி வருகிறார். ஜெயலலிதாவிற்கு நிகரானவர் உலகத்திலேயே கிடையாது. அண்ணாமலை அவரது மனைவியையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதிமுக, பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை; கூட்டணி தொடரும். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் அதிமுக 100 சதவீதம் உறுதியாக இருக்கிறது” என்றார்.