அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிமுக கட்சியில் இருக்கும் சீனியர்கள் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத இரண்டு வேட்பாளர்களை அதிமுக தலைமை தேர்ந்தெடுத்தது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர். அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.க்கு கே.பி.முனுசாமி, தம்பிதுரை, மைத்ரேயன், கோகுல இந்திரா, நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன், ஜெயவர்தன் மற்றும் சில அதிமுகவினர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில் மாநிலங்களவை பதவி காலம் முடிந்த அதிமுக முன்னாள் எம்.பி.மைத்ரேயன், மரியாதை நிமித்தமாக மோடியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றனர். மைத்ரேயன் பாஜகவில் இருந்து அதிமுக வந்தவர். இரண்டு முறை ஜெயலலிதா இவரை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுத்து அனுப்பினார். தற்போது அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி சீட் மறுக்கப்பட்ட நிலையில் பாஜக தலைமையை மைத்ரேயன் சந்தித்தது அதிமுகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பாஜக தலைமையை மைத்ரேயன் சந்தித்த போது அவருக்கு பாசிட்டிவ் சிக்னல் கொடுத்ததாக கூறுகின்றனர்.
இதனால் மீண்டும் பாஜகவில் மைத்ரேயன் இணைந்தால் அவருக்கு கவர்னர் அல்லது மத்தியில் ஒரு முக்கியமான பதவி கொடுக்கலாம் என்று அமித்ஷாவும், மோடியும் திட்டமிட்டதாக சொல்கிறார்கள். அவரின் சந்திப்பு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் , ஓ.பி.எஸுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர். இவரது சந்திப்பின் பின்னணி என்னவென்று டெல்லி வட்டாரங்களில் அதிமுக விசாரித்து வருவதாக தெரிகிறது. இவரது சந்திப்புக்கு பின் என்னவென்று சிறிது காலம் கழித்து தான் தெரியும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.