நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அந்த வகையில், அ.தி.மு.க சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், 40 தொகுதிகளுக்கான விருப்ப மனு இன்று (21-02-24) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 1 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.