கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் எழுந்த நிலையில், இது தொடர்பான ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதேபோல் ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்காக அவரது உறவினர்களைத் துன்புறுத்த, அலைக்கழிக்கக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், ராஜேந்திரபாலாஜியை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டிவரும் நிலையில், அவர் பெங்களூருவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே சென்னை, மதுரையில் தேடுதல் வேட்டை நடத்திவரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைதுசெய்ய தமிழ்நாடு காவல்துறை பெங்களூரு விரைந்துள்ளது. ஏற்கனவே 6 தனிப்படைகள் உள்ள நிலையில், மேலும் 3 தனிப்படைகள் கொடைக்கானல், கோவை, கேரளா ஆகிய இடங்களுக்கு விரைந்துள்ளன.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விவகாரம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய துடிப்பது கண்டனத்திற்குரியது. ராஜேந்திரபாலாஜியின் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற காரணத்திற்காக சட்டத்திற்குப் புறம்பாக துன்புறுத்தல் நடைபெறுகிறது. நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகும் அவரது உறவினர்களைத் தொந்தரவு செய்வது முறையல்ல'' என தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், ராஜேந்திரபாலாஜி விவகாரம் குறித்த கேள்விக்கு, ''அது நீதிமன்றத்தினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே கருத்து கூற விரும்பவில்லை'' என்று சொன்னது குறிப்பிடத்தகுந்தது.