Skip to main content

அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்துக்கு திடீர் பூட்டு..!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

admk

 

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தவர் மோகன். இவர் ஒன்றியச் செயலாளராக இருந்து படிப்படியாக கட்சியில் வளர்ந்து மாவட்டச் செயலாளர், அமைச்சர் என்று பதவி பெற்றவர். கடந்த 2014ஆம் ஆண்டு மோகனிடம், இந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்த ஜெ' அப்போது ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலாளராக இருந்த தண்டபாணியிடம் கொடுத்தார். ஆறுதல்படுத்த மோகனுக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2016 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மோகன். 

 

தற்போது அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழு உறுப்பினரான மோகன் மற்றும் தற்போதைய மாவட்டச் செயலாளர் குமரகுரு ஆகிய இருவருமே கடந்த பல ஆண்டுகளாகவே இரு அணிகளாகச் செயல்பட்டு வந்தனர். இது மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க உட்பட அனைத்துக் கட்சியினரும் அறிந்த ஒன்று. கட்சிப் பதவியில் இவர் மேலே வரக்கூடாது என்று அவரும், அவர் மேலே வரக்கூடாது என்று இவரும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் காலை வாரிவிட்டுக் கொண்டு இருந்தனர்.

 

ஜெ' மறைந்த பிறகு எடப்பாடி முதல்வரானார். அப்போது முதல் குமரகுரு கை ஓங்கி விட்டது. காரணம் குமரகுருவும், எடப்பாடியும் கடந்த காலங்களில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ஒருவருக்கொருவர் மிகுந்த நெருக்கமாக இருந்தவர்கள். இதன் காரணமாக, குமரகுரு பவர்ஃபுல்லாக வலம் வந்து கொண்டிருந்தார். மோகன் இருந்த இடம் தெரியாத அளவிற்குப்போனது. இந்த நிலையில் மோகன் ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்து வந்தார். அதன் அடிப்படையில் குமரகுரு ஈ.பி.எஸ் ஆதரவாளர், நம்பிக்கைக்குரிய நண்பர். 

 

DDD

 

மோகன், அமைச்சராக இருந்தபோது கட்சியில் தற்போது மேல்மட்ட முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமாகப் பழகியவர். அதனடிப்படையில் ஏற்கனவே மோகனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ள வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் 11 பேர்களில் மோகன் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ஒருமனதாக தேர்வு செய்து வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதை ஒவ்வொரு மாவட்டத்திலும், இனிப்பு வழங்கி, தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாடி வருகிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். அதன்படி வழிகாட்டுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மோகன், சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து அலுவலகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப் போவதாக தகவல் பரவியது.

 

கள்ளக்குறிச்சிக்கு வந்த மோகனை வரவேற்பதற்காக ஏராளமான கட்சியினர் திரண்டு இருந்தனர். இதில் ஒன்றியச் செயலாளர்கள் கள்ளக்குறிச்சி ராஜசேகர், திருநாவலூர் செண்பகவேல் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் காமராஜ், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா உட்பட சில கட்சி நிர்வாகிகள் மட்டுமே மோகனுக்கு வரவேற்பு அளிக்க வந்திருந்தனர்.

 

மோகனை வரவேற்க, கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர் பாபு உட்பட பலரும் வரவில்லை. மோகன் மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்தபோதும் அனைத்து ஒன்றியச் செயலாளர்கள் பல்வேறு கட்சி நிர்வாகிகள் அவரிடம் சென்று கைகட்டி நின்று காரியம் சாதித்தவர்கள்தான். ஆனால் இப்போது அவரை சந்திக்க வராமல் தப்பி ஓடுகிறார்கள்.

 

காரணம் மாவட்டச் செயலாளர் குமரகுரு கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என்றுதான், என்கிறார்கள் மோகனின் ஆதரவாளர்கள். மோகன் தன் ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகம் சென்றார். அங்கு அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் மோகன். கோபமுற்ற அவரது ஆதரவாளர்கள், அலுவலகப் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், மோகன் அது தவறு. நம்முடைய கட்சி அலுவலகம். அதன் பூட்டை  நாமே உடைக்கக்கூடாது என்று தடுத்துள்ளார்.

 

இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 4 மணி அளவில் அலுவலகம் முன்பு இருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு மோகன் மாலை அணிவித்தார். அப்போது கட்சித் தொண்டர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவருக்கும் வாழ்த்து கோஷம் எழுப்பினர். 

 

Ad

 

அமைச்சராகவும் மாவட்டச் செயலாளராகவும் மோகன் இருந்தபோது, இந்த மாவட்ட கட்சி அலுவலக இடத்தை விலைக்கு வாங்கி, கட்சிப் பெயரில் பதிவு செய்து, கட்டிடம் திறப்பு விழா வரை அவரே  முன்னின்று செய்தார். அப்படி அவர் உருவாக்கிய இந்தக் கட்டிடத்தில் அவர் வரும்போது உள்ளே நுழையவிடாமல் தடுப்பதாக மோகனின் ஆதராவாளர்கள் கூறுகின்றனர்.

 

கட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள், மோகன் வருவதை அறிந்ததும், அதற்கு முன்பே பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இது அவர்கள் எடுத்த முடிவு அல்ல, குமரகுரு ஆதரவாளர்கள் எடுத்த முடிவு. இதற்கெல்லாம் காரணம் உள்குத்து அரசியல் தான் என்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

 

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரும் தங்களது கருத்து முரண்பாடுகளை மறைத்துக்கொண்டு தற்போது ஒன்றிணைந்து போஸ் கொடுத்து தேர்தலில் வெற்றிபெற இறங்கி உள்ளனர். ஆனால் தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வெளிப்பார்வைக்கு கூட ஒன்றிணையாமல் பகிரங்கமாக முட்டி மோதும் நிலை உள்ளது. தங்கள் ஆதரவாளர்களை எப்படி ஒருங்கிணைக்கப் போகிறார்கள் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்