தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்தது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சியின் கடைசி நேர வியூகங்கள் எப்படி இருக்கிறது என்று விசாரித்த போது, மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல் என்பதால், ஆளும்கட்சி எதையும் எளிதாக சாதிக்கலாம் என்கிற தைரியத்தோடு உள்ளாட்சிக் களத்தில் இறங்கியுள்ளது. அதிகாரிகள் தரப்பின் ஒத்துழைப்பும் அவர்களுக்கு எளிதாவே கிடைத்துள்ளதாக சொல்கின்றனர். இதைப் புரிந்து கொண்ட தி.மு.க. தரப்போ, கவனமாக உழைத்து, தோழமைக் கட்சிகள் நிற்கும் இடங்களையும் சேர்த்து 60 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றினாலே போதும், அது பெரிய வெற்றிதான் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு வெற்றி பெற்றால் தான் கட்சியின் செல்வாக்கை கீழ்மட்டம் வரை வலுவாக வைத்திருக்க முடியும் என்று திமுக கணக்குப் போடுகிறது.
அதனால் கூட்டணிக் கட்சியினர் நிற்கும் இடங்களிலும் தீவிரமாக வேலைபாருங்கள் என்று அதிரடி உத்தரவு போட்டுள்ளதாக சொல்கின்றனர். ஆனாலும் போதுமான ஒத்துழைப்பு தி.மு.க. தரப்பிடமிருந்து கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் அதன் கூட்டணிக் கட்சியினரிடம் அதிகமாவே இருப்பதாக சொல்கின்றனர். அதனால் தி.மு.க. தலைவரான ஸ்டாலின், சம்பந்தப்பட்ட மா.செ.க்களையும் கட்சிப் பிரமுகர்களையும் தொடர்புகொண்டு கடைசி நேரம் வரை நிலைமையை சரிபண்ணிக்கிட்டே இருந்துள்ளார். வெற்றிக்கான அடையாளம் 60%க்கு மேலே என்பதில் தி.மு.க. தலைமை உறுதியாவே இருப்பதாக சொல்கின்றனர்.