தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27ம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடக்கிறது. இதனால் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் என்று கூறுகின்றனர். அதில், உள்ளாட்சி தேர்தலில் எந்த மாவட்டங்களில் அறுபது சதவிகித இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறுகிறதோ அந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுகவினர் உள்ளாட்சி தேர்தலில் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் மற்ற மாவட்டங்களை விட தங்கள் மாவட்டங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக தலைமையிடம் பெயர் வாங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் களப்பணியில் ஈடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அதை தங்களுக்கு சாதகமாக திமுகவினர் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற அதிமுகவினர் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவு தான் காரணம் என்பதால் சிறுபான்மை மக்களிடையே அதிமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு களப்பணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். திமுகவின் இந்த வியூகத்தை கண்டு அதிமுக தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.