என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து நேற்று பாமகவினர் என்.எல்.சி முன்பு நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. காவலர்கள் தாக்கப்பட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்திக் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் போராட்டம் காரணமாகவும், முன்னதாகவே பேருந்து மீது கல்வீச்சுகள் நிகழ்ந்ததன் காரணமாகவும் கடலூரில் நேற்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. மாவட்டத்தின் பதற்றமான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''குறுகிய கால அரசியல் லாபத்திற்காக வன்முறை நடத்தியவர்களுக்குக் கண்டனம். வன்முறைக்காகக் களத்தை வேண்டுமென்று உருவாக்குவதை அரசு வேடிக்கை பார்க்காது'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''இன்று முதல்வருக்கும், நேற்று பேட்டி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும் நான் சொல்ல விரும்புவதெல்லாம் விவசாயிகள் விரோதப் போக்கை திமுக அரசு கடைப்பிடிக்கக் கூடாது. இது திமுக அரசிற்கு ஒரு எச்சரிக்கையாக சொல்கிறேன். மேற்கு வங்கத்தில் நந்தி கிராமத்தில் விவசாயிகளுக்கு எதிரான போக்கை அன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைப்பிடித்ததன் காரணத்தால் தான் அவர்களுடைய ஆட்சி மேற்கு வங்கத்தில் அகற்றப்பட்டது. உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை. உங்களுடைய கவுன்டவுனை என்எல்சியில் இருந்து தொடங்காதீர்கள்.
நெய்வேலியில் நடப்பது விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே எதிரானது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறீர்களே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா. பயிர்களை நாசப்படுத்துகிறீர்களே. கதிர் விடுகின்ற நெல்லை அழிக்க யாருக்காவது மனசு இருக்குமா? மனசாட்சி இல்லாத பேய்களுக்குத் தான் இருக்கும். அப்படி மனசாட்சியில்லாத தனமாக என்.எல்.சி அதிகாரிகளுக்கு ஆதரவாக இருக்கின்ற திமுக அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள், ஆட்சியர்கள் என்னதான் சாதிக்கப் போகிறீர்கள். விவசாயத்தை, விவசாய நிலங்களை அழித்துவிட்டால் வளர்ச்சி வந்து விடுமா? கடலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் சொல்கிறார், அங்கு நெல் அழிந்ததற்கு நாங்கள் இழப்பீடு கொடுத்து விடுவோம் என்று, அடப்பாவிகளா இழப்பீட்டை வைத்து அதையா சாப்பிடப் போகிறோம். நெல்லை சாப்பிடலாம், அரிசி சாப்பிடலாம்... பணத்தை வைத்துக்கொண்டு? இன்று முதல்வருக்கு நான் சொல்வது, தயவுசெய்து என்எல்சி நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து பண்ணுங்க. இன்னையோட முடிச்சுடுங்க. நாங்க இதை விடப் போவது கிடையாது. கடுமையான போராட்டங்களை நாங்கள் செய்வோம். நேற்று பார்த்ததெல்லாம் ஒரு சாம்பிள் தான். இதற்கு மேலதான் இருக்கு'' என்றார்.