தொடர் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "மயிலாடுதுறை மாவட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 3,000 இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கருக்கு செலவு செய்த 30 ஆயிரம் தொகையை கடுமையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுக்கான காலக்கெடு தேதியை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும். கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
திருவெண்காடு பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஆறு நாட்களாக மின்சாரமின்றி மக்கள் அவதி அடைந்துள்ளனர். 2024-ல் அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமையும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் கடந்த 18 மாதங்களில் சட்டம், ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது" என்று குற்றம் சாட்டினார்.