அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. மறுபுறம் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தற்பொழுது விசாரணை துவங்கிய நிலையில் விசாரணையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இறுதித் தீர்ப்பிற்கு உட்பட்டது என்றும் கூறியுள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சின்னத்தில் இபிஎஸ் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இறுதி விசாரணை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த வழக்கில் விசாரணை துவங்கியுள்ளது. ஓபிஎஸ் அதிமுகவின் பொருளாளர், மூன்று முறை முதல்வர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார் என வாதத்தை முன்வைத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு. இந்நிலையில் வழக்கை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.