அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் எஃப்.பி.ஓ பங்குகள் விற்பனை செய்யும் திட்டத்தை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்தது. இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களைக் காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என்றும், முதலீட்டாளர்களுக்கு விற்பனைத் தொகையைத் திரும்ப செலுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதானி நிறுவனத்தின் மீது ஹிண்டன்பெர்க் நிறுவனம் வைத்துள்ள குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டது. இதனால் இரு அவைகளும் இரு நாட்கள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரத்தை வழங்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மும்பையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதானி குழும விவகாரத்தால் இந்திய பொருளாதார மதிப்பு பாதிக்கப்படவில்லை. இரண்டு நாட்களில் மட்டும் 800 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வந்திருக்கிறது. அதானி குழும விவகாரத்தில் நிதி கண்காணிப்பு அமைப்புகள் தங்களது பணியை சரிவர செய்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக நம் நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி இந்தியாவின் உள்ளார்ந்த பலம் அப்படியே உள்ளது என்பதைத்தான் காட்டுகிறது. இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியும் தனது நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லிவிட்டது. வங்கித் துறை வலுவாக இருப்பதை அது தெளிவுபடுத்திவிட்டது. எனவே இந்திய பொருளாதாரத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.