குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாராவது ஒரு முஸ்லீம் பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து முதல் ஆளாக நின்று குரல் கொடுப்பேன் என்று ரஜினி கூறியிருந்தார். இதனையடுத்து டெல்லி வன்முறைச் சூழலில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்திய விழாவில் மு.க.ஸ்டாலின், புதுவை நாராயணசாமி ஆகியோரோடு பேசிய இந்து என்.ராம், சி.ஏ.ஏ. பற்றி ரஜினி முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.
அதன் பின்பு, என் நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினி, சி.ஏ.ஏ. பற்றி எந்த அளவுக்கு ஆழமாக படித்துப் புரிந்து வைத்துள்ளார் தெரியவில்லை என்று என்.ராம் பேசியிருந்தார். பின்பு ஹைதராபாத்தில் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, போயஸ்கார்டன் வீட்டு வாசலில் பேட்டி கொடுத்தார். அதில், டெல்லியில் கலவரத்தை அடக்குவதில் மத்திய உளவுத்துறையும் உள்துறை அமைச்சகமும் தோல்வி அடைந்துள்ளது. கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்ட நிலையில் அந்த சட்டத்தை திரும்பப் பெற பெறமாட்டார்கள் என்றும் கூறினார். மேலும் சீனியர் பத்திரிகையாளர்கள் சிலர், பா.ஜ.க.வோடு தன்னை தொடர்புபடுத்துவதும் தன் பின்னால் பா.ஜ.க இருக்கிறது என்று சொல்வதும் தனக்கு வேதனையைத் தருவதாக கூறி பேட்டியை முடித்து விட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
இதனையடுத்து முஸ்லிம் அமைப்புகளில் ஒன்றான ஜமா அத்துல் உலா மாக்கள் சபையின் பொதுச் செயலாளரான அன்வர் பாது ஷாஹ், ரஜினிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு அதிருப்தியளிக்கிறது. பெரும்பான்மை மக்களின் கருத்துக்களில் உள்ள நியாயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. போராடும் மக்களின் கருத்துக்களை நீங்கள் கேட்க வேண்டும். ஜனநாயக ரீதியாக போராடுகிறவர்களை அவமதிக்கும் பழியிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பதோடு, ரஜினியை சந்தித்து விளக்கமளிக்கவும் தங்கள் உலமா சபை தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். உலமா சபையின் துணைத் தலைவர் இலியாஸ், ரஜினியைத் தொடர்புகொண்ட போது, ’உங்கள் சபையின் கடிதத்தைப் பார்த்தேன். உங்கள் கருத்துக்கள் நியாயமானதுதான். இது தொடர்பாக விரைவில் சந்திப்போம் என்றும் ரஜினி சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், தன் குடும்பத் திருமணத்துக்கு அழைப்பு கொடுக்க, ரஜினியை சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் சசிகலா தொடர்பாக பேசிக் கொண்டதாகத் தகவல் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் உளவுத்துறையிடம் விவரம் எடப்பாடி கேட்டுள்ளதாக சொல்கின்றனர்.