வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்)- 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் (ஏ.சி.சண்முகம்)- 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்(தீபலட்சுமி)- 26,995 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வேலூர் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அதிமுக வேட்பாளரும் புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்து இருந்தார். அதோடு நான் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பாஜக கொண்டு வந்த முத்தலாக் சட்டமும், காஷ்மீரில் 370 பிரிவை நீக்கியதும் தான் காரணம் என்று ஏ.சி.சண்முகம் கூறியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி குறித்து தான் கூறாத கருத்து வெளியாகி உள்ளதாக ஏ.சி.சண்முகம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வேலூர் மக்களவை தேர்தலில் நான் முத்தலாக், காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் ஆகியவற்றால் தான் வேலூர் மக்களவை தேர்தலில் நான் தோல்வியுற்றேன் என நான் சொல்லாத கருத்து வெளியாகி இருப்பது மிகவும் தவறான செயலாகும். மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள முத்தலாக் தடைச் சட்டம், இஸ்லாமிய பெண்களின் வாழ்வுக்கும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டமாகும். அதே போல காஷ்மீருக்கான 370 தனி அந்தஸ்து நீக்கம் சட்டத்தை ஒருசிலர் மட்டுமே அரசுக்கு எதிராக, மற்றவர்களை தூண்டி விடும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இந்த சட்டப்பிரிவினை நீக்கியதன் மூலம் காஷ்மீரில் தொழில் வளர்ச்சி பெருகும்.
வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் உண்மையான வெற்றி அதிமுகவுக்கு தான் கிடைத்துள்ளது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலில் மக்களை ஏமாற்ற முடியவில்லை. ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் வீடு, வீடாக சென்று திண்ணைப் பிரசாரம் செய்தும், கண்ணீர் விட்டு அழுதும் மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக தட்டுத் தடுமாறி இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. வேலூரில் 47 சதவீத வாக்குகளை பெற்றுள்ள அதிமுக தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் 29 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்ற அ.தி.மு.க. இப்போது 11 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. ஆம்பூரில் தொகுதியில் 39 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்ற திமுக தற்போது 30 ஆயிரம் வாக்குகளை இழந்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் மக்கள் திமுகவை புறக்கணித்துள்ளதையே இது காட்டுகிறது. வேலூர் தொகுதி மக்கள் எனக்கு கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர். நான் வெற்றி பெறாத போதிலும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன் என ஏ.சி. சண்முகம் தெரிவித்தார் .