கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சி அமைக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியுள்ளார்கள். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியில் நேற்று இரண்டாவது முறையாக (19.04.2023) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் வெளியான வேட்பாளர் பட்டியலில் முகமது யூசுப் சவனுர் என்பவர் சிக்காவி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முகமது யூசுப் சவனுருக்கு பதிலாக யாசின் அகமது கான் பதான் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.