தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ஆம் தேதி துவங்கி இன்றுடன் (19ஆம் தேதி) முடிவடைந்தது. இதுவரை தமிழகத்தில் 234 தொகுதிகளில் 4,000க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணியான பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், பாஜக வேட்பாளராக தணிகைவேல் என்பவரை பாஜக தலைமை அறிவித்தது. இவரும் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக, பாஜக பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுவந்தார். இன்று, மதியம் 12.30 மணியளவில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், திடீரென அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சார்ந்தவரும், பி.பி.யுமான அன்பழகன், திடீரென வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இது அத்தொகுதி அதிமுக மற்றும் பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தாக்கல் செய்த மனுவில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடப்போவதாக குறிப்பிட்டிருப்பதாக தெரியவருகிறது. இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில், பாஜக வேட்பாளர் மனுத் தாக்கல் செய்திருக்கும் நிலையில் அதிமுக பிரமுகரும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.