கர்நாடக சட்டமன்றத்திற்கான ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி கர்நாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறது. இதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ள ஆம் ஆத்மி கட்சி நேற்று கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான தங்களது வாக்குறுதிகளை வெளியிட்டது.
இதனை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் பெங்களூருவில், கட்சியின் 12 அம்ச தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டு பேசுகையில், "தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளை மிகச் சிறந்த முறையில் மேம்படுத்துவோம். தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்து ஒழுங்குபடுத்த ஒரு குழுவை அமைப்போம். ஒப்பந்த ஆசிரியர்களின் பணியிடங்களை முறைப்படுத்துவோம். மாணவர்களுக்கு இலவசப் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன் ஆறு மாத கால வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்படும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் வயது 16 ஆகக் குறைக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்தி முன்னுரிமையின் அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று தெரிவித்தார்.
கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் பிருத்வி ரெட்டி கூறுகையில், "ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். பொது மக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இலவச சுகாதாரம் மற்றும் விவசாயிகளின் விளை பொருட்கள் மீது குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். சமூக நலன் காக்கப்படும். வீட்டிற்கே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். உள்ளூர் மக்களுக்கு 80% வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். பின்தங்கிய பகுதிகள் மேம்படுத்தப்படும் மற்றும் பெங்களூரில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அரசு வேலைக்கு கன்னட மொழி தெரிந்திருப்பது கட்டாயமாக்கப்படும். விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும். சுவாமிநாதன் கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து வழங்கப்படும். விவசாயத்திற்கு 12 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்ற தவறினால், மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் மீது வழக்கு தொடரலாம்" என்று கூறினார்.
டெல்லியில் முதலில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், கர்நாடக தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்ததுடன், தேர்தலுக்கான வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளது. கர்நாடகா தேர்தலில் ஆம் ஆத்மியின் செயல்பாடுகளை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.