
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை திருக்கோவிலில் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பாக கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளரும், தொழிலதிபருமான ஏ.வி.சாரதி பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு ஏ.வி.சாரதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது, திமுகவைச் சேர்ந்த காட்பாடி ஒன்றியக் குழு பெருந்தலைவர் வேல்முருகன், ராணிப்பேட்டை முன்னாள் நகரமன்ற தலைவருமான குட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி மற்றும் சில பேர் தேசிய கீதத்தை சிரித்தப்படியும் பாடத் தெரியாமல் கேலிக்கூத்தாகவும் பாடியதாகக் கூறப்படுகிறது. தேசிய கீத பாடலை அவமானப்படுத்தும் விதமாக மரியாதை செலுத்தாமல் பாடியது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகை மன்னன் என்று கூறப்படும் காட்பாடி ஒன்றிய குழு பெருந்தலைவர் வேல்முருகன் தேசிய பாடலுக்கு எந்த மரியாதையும் தராமல் சிரித்துக் கொண்டு பாடியது அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக கூறி சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்வில் ஒன்றியக் குழு பெருந்தலைவர் தேசிய கீததத்தை, மரியாதை இல்லாமல் பாடி கேலிக்கூத்தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.