போலி பட்டா வழங்கி 8 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையார் என்னும் கிராமத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், 2006 சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கியது. இதில் மீதமுள்ள இடங்களில் வீட்டுமனை பட்டா வாங்கித் தருவதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறையின் மாவட்ட செயலாளர் செண்பகசாமி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர் பழையார் கிராமத்தில் வசிக்கும் 40 பேரிடம் வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக தலா 20 ஆயிரம் என மொத்தமாக ரூபாய் 8 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
செண்பக சாமி, பணம் கொடுத்தவர்களுக்குப் போலி பட்டா வழங்கியது தெரிய வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் செண்பகசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செண்பகசாமியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.