தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கந்துகுருவில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நெரிசலில் சிக்கி சிலர் கால்வாயில் விழுந்து படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும், சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களை சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான நாரா லோகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எங்கள் கட்சியினர் இறந்தது கட்சிக்கு பெரும் இழப்பு. அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற ஏற்பாடு செய்துள்ளோம். அவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு கட்சி அனைத்து வழிகளிலும் துணை நிற்கும்” எனக் கூறியுள்ளார்.