2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில், தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட சட்டத்திருத்தம் செய்யப்படும். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும். ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாள் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை முன்பிருந்தது போல் குறைக்கப்படும். மாநிலங்களுக்கு பாரபட்சம் இல்லாமல் நிதி பங்கிடு செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் பழைய நடைமுறை கொண்டுவரப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மத்திய நிதிக்குழுவின் முடிவுகள் மாநில மன்றத்தால் நிர்வகிக்கப்படும். கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படும். கால முடிவுற்ற பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்.
மதுரை, திருச்சி, சேலம், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். புயல் பாதிக்கப்படும் இடங்களில் நிரந்தர பாதுகாப்பு இல்லம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச ரயில் பயணங்கள் அளிக்கப்படும். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்துவோம். உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.