2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத் தொடரில் ஆளுநர் படிக்கும்போது, தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வரிகளைப் புறக்கணித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுகள் அவைக் குறிப்பில் இடம்பெறக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், கூட்டத் தொடரில் மூன்றாவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேரவையில் தீர்மானத்தைத் தாக்கல் செய்திருக்கிறார்.