கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கென தங்களுக்கு தனியாக கபர்ஸ்தான் நிலம் வழங்கவேண்டும் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சுமார் 20 ஆண்டுகளாக வலியுறுத்திவந்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி அளித்திருந்தார்.
இதற்கான இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு, வேலுமணி உத்தரவிட்ட நிலையில், மதுக்கரையில் உள்ள முக்கிய சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் வேலுமணி, அதிகாரிகளுடன் சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டார்.
அவர்களுடன் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் சென்றிருந்தனர். அந்த இடம் ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில், ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலுமணி, "20 ஆண்டுகளாக இந்த பகுதி இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர் என்பதை அறிவேன். இஸ்லாமியர்களுக்கு எப்படியாவது கபர்ஸ்தான் நிலம் வழங்கப்படும் எனக் கூறியிருந்தேன்.
அதன்படியே தேர்வு செய்யப்பட்ட இடம் ஒன்றே முக்கால் ஏக்கர் உடையது. இந்த நிலம் முக்கிய சாலை வழியாக அமைந்துள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள். இதனையடுத்து கிறிஸ்தவர்களுக்கும் தனியாக மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாவட்டத்துக்கு 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். கோவை சத்தி ரோடு அவிநாசி ரோடு திருச்சி ரோடு சாலைகளில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கோவைக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் செய்யப்படுகிறது.
மறைந்த எங்கள் புரட்சித்தலைவவி அம்மா, எனக்கு கொடுத்த பதவியால் மக்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் என்னென்ன வளர்ச்சி தேவையோ அனைத்தும் கூறுங்கள் அனைத்தும் நாங்கள் செய்து தருகிறோம்" என்று உறுதியளித்துள்ளார் வேலுமணி.