சட்டப்பேரவை கூட்டமானது செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-2022 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பொது பட்ஜெட், வேளாண் பெட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தின் கடைசி நாளில் நிதியமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் பதிலுரை ஆற்றவுள்ளார்கள்.
இந்த சூழலில், இன்று நடைபெற்ற விவாதத்தில் வெள்ளையறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “வெள்ளை அறிக்கை என்பது தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் பின்வாங்குவதற்கான முயற்சி என்பதைப்போல உதயகுமார் கருத்து தெரிவித்தார்.
நான் நேற்று முன்தினம் 100வது நாள் காணக்கூடிய இந்த ஆட்சிக்குப் பாராட்டு தெரிவித்துப் பேசினேன். அப்போது ஏற்புரையாற்றிப் பேசும்போது கூடச் சொன்னேன்; எந்த காரணத்தைக் கொண்டும் நாங்கள் அளித்திருக்கிற வாக்குறுதிகளிலிருந்து என்றுமே பின் வாங்க மாட்டோம். நீங்கள் கேட்கலாம் விவசாயக் கடன், நகைக் கடன் எல்லாம் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னீர்களே, அதற்கு மழுப்பலான பதில்களைச் சொல்லியுள்ளீர்களே என்று. இதை உறுதியாகச் சொல்கிறேன். வெள்ளை அறிக்கையில் இதுகுறித்து தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய கணக்குப் போட்டுப் பார்க்கையில், அதிலும் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருக்கிறது. அதை எல்லாம் நிச்சயமாக சரிசெய்து அதற்கு பிறகு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியிருக்கிறோம்.
உங்கள் ஆட்சி நடைபெறும் பொழுது நீங்கள் தந்த வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை, நாட்டு மக்களும் மறக்கவில்லை. அதில் சிலவற்றை நிறைவேற்றி உள்ளீர்கள். ஆனால் பலவற்றை நிறைவேற்றவில்லை. அதனை நீங்கள் மறந்து விடக் கூடாது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள், தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட்டிற்கு 25ரூபாய்க்கும் தரப்படும் என்று சொன்னீர்கள், தந்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகக் கொடுக்கப்படும் என்று சொன்னீர்கள், யாருக்காவது கொடுத்தீர்களா? குறைந்த விலையிலேயே அவசியமான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தீர்கள், கொடுக்கப்பட்டதா? அனைவருக்கு அம்மா வங்கி அட்டை கொடுப்போம் என்றீர்கள், அது என்னாச்சு? கோ ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்று சொன்னீர்கள், அது கொடுத்தீர்களா?
பண்ணை மகளிர் குழு அமைக்கப்படும் என்று கூறினீர்கள், அது எங்கு அமைத்தீர்கள்? அனைத்து பொது இடங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தித் தருவீர்கள் என்று சொன்னீர்கள், எங்கேயாவது ஒரு இடத்தில் காண்பியுங்கள்? டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் அமைக்கப்படும் சொன்னீர்கள், எங்கையாவது அமைத்தீர்களா? பட்டு ஜவுளி பூங்கா உருவாக்குவோம் என்று சொன்னீர்கள், உருவாக்கியுள்ளீர்களா? சென்னையில் மோனோ ரயில் என்று சொன்னீர்கள் ஆனால் கலைஞர் கொண்டு வந்த மெட்ரோ ரயிலைத் தான் நிறைவேற்றினீர்கள். இப்படி பெரிய பட்டியலே இருக்கு. இந்த விவசாய பயிர்க் கடன் மற்றும் நகைக் கடனை பொறுத்தவரைக்கும் எங்கெங்கு முறைகேடுகள் நடந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளித்துப் பேசுகிற பொழுது நிச்சயமாக அவைகளெல்லாம் ஆதாரங்களோடு உங்களிடத்தில் எடுத்துச் சொல்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிலளித்தார்.