தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஐந்தை தி.மு.க.வும், ஐந்தை அ.தி.மு.க. வும் கைப்பற்றியுள்ளன. கோவில்பட்டியில் தி.மு.க. தரப்பு தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டினாலும் இழுபறி நிலை. அதுபோல் கயத்தாறு ஒன்றியத்தில் அ.ம.மு.க.வின் நிலையும் அவ்வாறே..!
"கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வடக்கு மாவட்டத்தில் விளாத்திகுளத்தை இழந்து அறிவாலயத்தில் விசாரணை வரை சென்றது. ஒன்றிய சேர்மன்களில் புதூர் மற்றும் விளாத்தி குளத்தை இழந்திருக்க, தற்போது கோவில்பட்டியையும் இழந்தால் கட்சியில் தமக்கு மரியாதை கிடையாது என்பதனை கருத்தில்கொண்டு இரு கட்சிகளிலுமுள்ள வடக்கு மா.செ.க்கள் டீல் போட்டதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது'' என்கிறார் தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகியொருவர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையன்றே ஒட்டப்பிடாரம், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் தூத்துக்குடியிலுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாஜீவனுக்கு சொந்தமான ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டனர். இதில், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் உறவினர் வீரபாண்டி கோபி, ஒட்டப்பிடாரம் சேர்மன் என முடிவுசெய்யப்பட்டதாகவும், கவுன்சிலர்கள் அனைவருக்கும் தலைக்கு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.
இதுகுறித்து தகவலறிய வடக்கு மா.செ.வும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவனை தொடர்புகொண்டோம். "எனக்கு அந்த மாதிரி அண்டர்கிரவுண்ட் டீலிங்கெல்லாம் வைக்கத் தெரியாது, அதனை நான் கற்றுக்கொள்ளவும் இல்லை. கோவில்பட்டியைப் பொறுத்தவரை எங்களிடம்தான் முழு மெஜாரிட்டி இருக்கு. இரண்டு சுயேட்சைகளும் ஆதரவு கொடுத்திருக்காங்க! ஒட்டப்பிடாரத்தைப் பொறுத்தவரை எனக்கு ஆதரவு கொடுங்க என எங்க வேட்பாளர் கேட்டிருக்கின்றார். அவ்வளவுதான்'" என்றார் அவர். அ.தி.மு.க. அமைச்சர் கடம்பூர் ராஜுவோ இறுதிவரை நம் லைனுக்கு வரவில்லை.